ஆற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

கொள்ளிடம் அருகே ஆற்றில் அழுகிய நிலையில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த வாலிபர் பிணமாக கிடந்தார்.

Update: 2021-11-16 15:52 GMT
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ஆற்றில் அழுகிய நிலையில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த வாலிபர் பிணமாக கிடந்தார்.
ஆற்றில் வாலிபர் பிணம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் அழுகிய நிலையில் நேற்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்றில் பிணமாக கிடந்தவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் கண்ணன்(வயது 21) என்பது தெரிய வந்தது.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
கடந்த 5-ந்தேதி காலை 11 மணி அளவில் கண்ணன், சித்தமல்லி கிராமம் அருகே மன்னிப்பள்ளத்தில் உள்ள தனது மாமா ஜெயராமன் வீட்டிற்கு வந்து, தான் வெளிநாட்டுக்கு செல்லும் தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்ட அவர், மகத்துதுறை என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆழங்காத்தான் கிராமத்திற்கு செல்ல கொள்ளிடம் ஆற்றை கடந்து சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நீரோட்டம் அதிகம் இருந்ததால் தண்ணீரில் கண்ணன் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. 
இதுகுறித்து போலீசார் காட்டுமன்னார்குடியில் உள்ள கண்ணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்