வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்
வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்
தூத்துக்குடி:
வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிக மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 662 மிமீ ஆகும். தற்போது வரை 619 மிமீ மழைப் பொழிவு கிடைத்துள்ளது. மழைபொழிவு சீரான இடைவெளியில் கிடைக்க பெறாமல் ஓரிரு நாட்களில் அதிக அளவு பெறும்போது மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிர்கள் நிலவகைப்பாடு, நிலத்தின் சரிவு, வடிகால் வசதி, குளம் போன்ற சேமிப்பு அமைப்புகள் ஆகியவைகளுக்கு எற்ப ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பயிர் வகையான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் படர் கொடிவகை காய்கள் ஆகியவற்றிற்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுகுவதை தவிர்க்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும்.
வாழைத்தார்கள் அறுவடை
வாழை பயிரிட்ட வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிகால் அமைத்து வடிந்த பின்னர் பெவிஸ்டின் மருந்தை 2 கிராம் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழையின் கிழங்கு மற்றும் வேர்பகுதி நன்கு நனையும்படி ஊற்றினால் வாடல் மற்றும் பூஞ்சாண் நோய் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அறுவடைக்கு தயாரான 75 சதவிகிதத்திற்கு மேல் முதிர்ச்சி அடைந்த வாழைத்தார்களை உடனடியாக அறுவடை செய்து சந்தைப்படுத்தலாம்.
குச்சிப்பந்தல்
பந்தல் காய்கறி பயிர்களுக்கு இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை மற்றும் காய்கறி பயிர் செய்வோர் மண் அணைத்தும் வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதை தடுக்க வேண்டும். கொய்யா, மா, சப்போட்டா, நெல்லி போன்ற பல்லாண்டு பயிர்களில் வீசக்கூடிய காற்று மரங்களின் இடையே புகுந்து செல்லும் வகையில் காய்ந்த, பட்டுப்போன, தேவையற்ற பக்கக் கிளைகள் மற்றும் அதிகப்படியான இலைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் மரத்தின் சுமையை குறைத்து காற்றில் இருந்து பாதுகாக்கலாம். மரத்தின் கிளைகள் வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்சிகுளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம்.
வடிகால் வசதி
அடிமரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். ஒன்று முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளுக்கு குச்சிகளைப் பயன்படுத்தி முட்டு கொடுப்பது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். குறிப்பாக மரத்தின் அடிப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பசுமைக்குடிலின் உட்பகுதியில் காற்று உட்புகா வண்ணம் கதவுகள் மூடியிருக்க வேண்டும். அருகிலுள்ள பெரிய மரங்களில் கிளைகளை அகற்ற வேண்டும். கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரிசெய்ய வேண்டும்.
உயிர் உரங்கள்
அனைத்து காய்கறி, பழம் மற்றும் மருத்துவப் பயிர்களுக்கு 15 நாட்கள் இடைவெளியில் உயிர் உரங்களை தவறாமல் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் தெளித்து ஊட்ட மேலாண்மை மேற்கொள்வதுடன் டிரைகோடெர்மா 4 கிராம், சூடோமோனஸ் 10 கிராம் ஆகியவைகளை 1 கிலோ தொழு உரம் அல்லது மணல் அல்லது தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். வெங்காயம் போன்ற பயிர் வகைகளுக்கு கிழங்கு நனையும் படி ஊற்றலாம்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் கயிறு, கழிகள் மூலம் முட்டுக் கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தினை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்குப் பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தைச் சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். பூஞ்சாண் கொல்லிகள் மற்றும் உயிரி நோய்க்கட்டுப்பாட்டுக் காரணிகளை தெளித்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மெஞ்ஞானபுரம்
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆணையூர் -வீரவநல்லூர் சிஜிஎப் நிதியில் இருந்து ரூ13.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, பரமன்குறிச்சியில் ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் நுன் உரக்குழி மையத்தையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர் கோகிலா, நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ், செயற்பொறியாளர் ராஜா, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி பொற்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.