வீரபாண்டி,
திருப்பூரில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கல்யாண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து ரூ.5 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கோவில்
திருப்பூர்-மங்கலம் சாலை எஸ்.ஆர்.நகரில் 50 சென்ட் இடத்தில் ஆறுபடை நவக்கிரக ரத்தின விநாயகர் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் மண்டபமும், 2 கடைகளும் உள்ளன. இந்த கோவிலை கோவில் நிர்வாகிகள், எஸ்.ஆர். நகர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய அறக்கட்டளை இணைந்து நடத்தி வந்தனர்.
இந்த கோவில், கல்யாண மண்டபம், மண்டபத்தை ஒட்டியுள்ள கடை அனைத்தும் மாநகரட்சி இடத்தில் இருப்பதாகவும் அதை மீட்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று கோவில் நிர்வாகிகளிடம், மண்டபம் மற்றும் கடையை மாநகராட்சி வசம் ஒப்படைக்க கோரி ,நோட்டீசு கொடுத்தனர். ஆனால் கோவில் நிர்வாகிகள் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரூ.5 கோடி கட்டிடம் மீட்பு
இதையடுத்து நேற்று திருப்பூர் மத்திய போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் நவக்கிரக ரத்தின விநாயகர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அந்த கல்யாண மண்டபம் மற்றும் 2 கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றனர். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் இடத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்கிற அனைத்து ஆதாரமும் இருப்பதாக கோவில் நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஏற்கனவே கோவில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் போலீசார் உதவியுடன் கோவில் மண்டபம் மற்றும் வெளிப்புற உள்ள கடைகளுக்கு சீல் வைத்து அவற்றை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மண்டபமும், 2 கடைகளும் 20 சென்ட்டில் கட்டப்பட்டதாகும். இவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டம்
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய நற்பணி மன்றம் அறக்கட்டளை சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மண்டபம் மற்றும் அதன் அருகே உள்ள கடைகளில் வரக்கூடிய வாடகை கோவில் பணிக்காக மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கோவில் மண்டபத்தை மாநகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. மண்டபத்தினை மீட்க சட்ட ரீதியாகவும் பொதுமக்கள் உதவியுடன் போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.