மாணவிகள் நேற்று 2வது நாளாக போராட்டம்
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர்.
உடுமலை, நவ.17-
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
மாணவி தற்கொலை
கோவையில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 17 வயது மாணவி கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவியின் தற்கொலை வழக்கில் முழு விசாரணை நடத்தி, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் 2-வது நாளாக நேற்று கல்லூரியின் பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பு சாலையோரம் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்காக பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.