கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
குடிமங்கலம் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி நீர் வழித்தடங்கள் மூடப்படுவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குடிமங்கலம், நவ.17-
குடிமங்கலம் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி நீர் வழித்தடங்கள் மூடப்படுவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நீர் வழித்தடம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆனாலும் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் கருகி வீணாகியது. இதற்கு போதிய மழைப்பொழிவு இல்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், பராமரிப்பில்லாத நீர் வழித்தடங்கள் முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழை என்பதை வரமாக பார்த்த நிலை மாறி சாபமாகப் பார்க்கும் நிலை உருவாகி விட்டது. இதற்கு மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாததே காரணமாகும். மழை வெள்ளத்தால் சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதேநிலை மற்ற பகுதிகளுக்கும் வராமல் பாதுகாக்க வேண்டுமானால் மழைநீர் வடிகால்களை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
குப்பைகள்
பொதுவாக பள்ளமான இடங்களை எல்லாம் குப்பைகளை கொட்டுவதற்கான இடமாகப் பார்க்கும் மனநிலை பலரிடம் காணப்படுகிறது. அந்தவகையில் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள் கொட்டி மூடப்பட்டுள்ளது. அத்துடன் கொங்கல்நகரம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டி மழைநீர் வடிகால்களை முழுவதுமாக மூடியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலையில் வழிந்தோடி போக்குவரத்துக்கு இடையூறை உண்டாக்குவதுடன் சாலையை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
அத்துடன் கனமழைக்காலங்களில் அதிக அளவில் பெருக்கெடுக்கும் மழைநீர் தடைப்படும்போது அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை வீணாக்கும் சூழல் உள்ளது.எனவே மழை நீர் வடிகால்களை தூர் வருவதுடன் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த முறையான வழிகாட்டல்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்குவதற்கு முன் வர வேண்டும். இதன்மூலம் நீர்நிலைகள் நிறைந்து நிலத்தடி நீர் மட்டம் உயரவும் விவசாயிகள் பயன்பெறவும் முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.