கடந்த 3 நாட்களில் சென்னையில் 2 ஆயிரத்து 876 தெருக்களில் கழிவுநீர் அகற்றம்: குடிநீர் வாரியம்

சென்னையில் கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 876 தெருக்களில் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடைபெற்றதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-16 11:02 GMT
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 3 நாட்களாக...

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 302 கழிவுநீர் நீரேற்றும் நிலையங்கள் மூலம் 24 மணி நேரமும் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பருவமழைக்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 580 எம்.எல்.டி. அளவிலான கழிவுநீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பருவமழை காரணமாக தற்போது நாளொன்றுக்கு 912 எம்.எல்.டி. வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கழிவுநீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழிவுநீர் அகற்றும் பணி

சென்னையில் 200 பணிமனைகளில் கடந்த 3 நாட்களில் இரவு நேரங்களில் கழிவுநீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை அகற்றும் பணியில் 350 உதவி பொறியாளர்கள் மற்றும் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மொத்தம் 2 ஆயிரத்து 876 தெருக்களில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 6 ஆயிரத்து 367 எந்திர நுழைவாயில்கள் தூர்வாரப்பட்டன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இப்பணிகளில், 54 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதற்காக 142 ஜெட்ராடிங் எந்திரங்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக 260 தூர்வாரும் ஆட்டோக்கள் கழிவுநீரினை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

முன்னேற்பாடு பணிகள்

மேலும் கழிவுநீர், குடிநீர் குழாய்களில் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரி, பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்