அம்மா உணவகங்கள் மூலம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேருக்கு இலவசமாக உணவு: சென்னை மாநகராட்சி
அம்மா உணவகங்கள் மூலம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
இலவச உணவு
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அம்மா உணவகங்களில் கடந்த 10-ந்தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 5 நாட்கள் இலவச உணவு வழங்கப்பட்டது. நேற்று முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
13,68,385 பேர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 5 நாட்களாக பொதுமக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 10-ந்தேதி 2 லட்சத்து 38 ஆயிரத்து 733 பேருக்கும், 11-ந்தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 47 பேருக்கும், 12-ந்தேதி 2 லட்சத்து 86 ஆயிரத்து 462 பேருக்கும், 13-ந்தேதி 3 லட்சத்து 1,130 பேருக்கும், 14-ந்தேதி 2 லட்சத்து 77 ஆயிரத்து 13 பேருக்கும் என மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காலை உணவாக 13 லட்சத்து 29 ஆயிரத்து 135 இட்லியும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 287 எண்ணிக்கையில் பொங்கலும், மதிய உணவாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 764 எண்ணிக்கையில் சாம்பார் சாதமும், 54 ஆயிரத்து 628 எண்ணிக்கையில் கருவேப்பிலை சாதமும், 85 ஆயிரத்து 111 எண்ணிக்கையில் லெமன் சாதமும், 51 ஆயிரத்து 272 எண்ணிக்கையில் தயிர் சாதமும், இரவு நேரத்துக்கு 5 லட்சத்து 69 ஆயிரத்து 422 சப்பாத்தியும் வழங்கப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி சார்பில்
சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாநகராட்சியின் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு 3 வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிவாரண முகாம்களில் 1,530 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 7-ந்தேதி முதல் நேற்று வரை பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 60 லட்சத்து 74 ஆயிரத்து 37 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.