மனைவியை கொன்று விட்டு விவசாயி தற்கொலை. சொத்துகளை மீட்டுத்தரக்கோரி குழந்தைகள் திடீர் சாலை மறியல்

நிலம் விற்ற பிரச்சினையில் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த விவசாயியின் குழந்தைகள் அந்த சொத்துகளை மீட்டு தரக்கோரி கிராம மக்களுடன் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-11-16 03:55 GMT
ஆரணி

நிலம் விற்ற பிரச்சினையில் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த விவசாயியின் குழந்தைகள் அந்த சொத்துகளை மீட்டு தரக்கோரி கிராம மக்களுடன் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூ வியாபாரத்தில் நஷ்டம்

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, விவசாயி. இவரின் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு யோகேஸ்வரி (வயது 16), ஹேமமாலினி (9), கவுரிசங்கர் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக வீட்டுக்கு அருகில் 2 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. 
ஆரணி பள்ளிக்கூட தெருவி்ல் கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை வசித்து வருகிறார். அவர், ஆரணியில் பூ வியாபாரம் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. 

கிரைய ஒப்பந்தம் மூலம் விற்பனை
கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை தனது கடன் சுமையை மகள் கலைச்செல்வியிடம் தெரிவித்துள்ளார். அவர், மருமகன் மூர்த்தியிடம் நிலப்பத்திரத்தை கொடுத்து, அதை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டுக் கொண்டார். மாமனார் ஏழுமலை கேட்டுக்கொண்டதற்கிணங்க, மூர்த்தி அந்த நிலத்தை குமரன் என்பவரிடம் ‘கிரைய ஒப்பந்தம்’ என்ற பெயரில் விற்பனை செய்து, பணம் பெற்று கடனை அடைத்துள்ளார்.

தற்கொலை
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி மூர்த்தி தனது மனைவி கலைச்செல்வியை, உன்னால் தான் இந்த வீடு இன்று வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. நீ என்னை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டாயே, எனக் கூறி ஆத்திரத்தில் சுத்தியலால் கலைச்செல்வியை அடித்துக்கொலை செய்து, வீட்டின் பின்பக்கம் இருக்கிற நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர், போலீஸ் விசாரணைக்கு பயந்த மூர்த்தியும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குழந்தைகள் சாலை மறியல்

இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தியின் மகள்கள் யோகேஸ்வரி, ஹேமமாலினி, மகன் கவுரிசங்கர் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் கிராம மக்களுடன் ஆரணி-வந்தவாசி சாலையில் ஆகாரம் கூட்ரோட்டில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை விற்பனை செய்த சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், ஆரணி மண்டல துணைத் தாசில்தார் குமரேசன் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களிடமும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்