ஏற்காட்டில் உரக்குடோன் மீது மரம் விழுந்ததில் 5 பெண்கள் படுகாயம்
ஏற்காட்டில் உரக்குடோன் மீது மரம் விழுந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.;
ஏற்காடு:
ஏற்காட்டில் உரக்குடோன் மீது மரம் விழுந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளர்கள்
ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் காபி தோட்டத்தில் கூலித்தொழிலாளர்களாக அதே பகுதியை சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 52), மணி மனைவி ஜெயமணி (50), விஜயசிங் மனைவி உஷா தேவி (61), அருணாச்சலம் மனைவி கமலா (64), பழனிசாமி மனைவி கமலா (62) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று மாலை காபி செடிக்கு உரம் போடுவதற்காக உரம் சேமித்து வைத்துள்ள குடோனுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று குடோன் மீது விழுந்தது. இதனால் குடோனின் மேற்கூரை இடிந்து உரம் எடுக்க சென்ற 5 பெண்களின் மீதும் விழுந்தது.
5 பெண்கள் படுகாயம்
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயமணி கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.