காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பசவராஜ் பொம்மை எதிர்ப்பு

காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2021-11-15 21:39 GMT
பெங்களூரு: காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

வரவேற்பு அளிக்கப்பட்டது

தென்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மாநாடு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தென்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை முடித்துக்கொண்டு அன்றைய தினம் இரவு திருப்பதியிலேயே பசவராஜ் பொம்மை தங்கினார்.

பிறகு நேற்று காலை அவர் திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று மதியம் தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சில பிரச்சினைகள்

திருப்பதியில் தென்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தமிழ்நாட்டில் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன்.

அந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயரிப்பதற்கு முன்பே, காவிரியில் உபரி நீர் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று பேசினேன். இதை நான் அழுத்தமாக கூறினேன். இதையடுத்து மத்திய மந்திரி அமித்ஷா, இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஜல்சக்தித்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காவிரி பிரச்சினை

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை பரிசீலிப்பதாக அவர் கூறினார். இது தவிர பிற நதி நீர் பிரச்சினைகள் குறித்தும் பேசினேன். மெட்ரோவுக்கு ரெயில்வேக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது, மீனவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது போன்றவை குறித்தும் பேசினேன்.

மேகதாது குறித்து நான் பேசினேன். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் வரவில்லை. அதனால் அவர்கள் இதுகுறித்து பேசவில்லை. நாங்கள் ஜல்சக்தித்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். இந்த காவிரி பிரச்சினை சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. கர்நாடகத்தில் காவிரி தொடர்பாக எந்த திட்டம் செயல்படுத்தினாலும தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

வெளிவட்டச்சாலை

அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கிறார்கள். அதே போல் தமிழக அரசு மேற்கொள்ளும் திட்டங்களையும் கர்நாடகம் எதிர்க்கிறது. இதில் ஒரு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டும். அதை நான் செய்கிறேன். பெங்களூரு வெளிவட்டச்சாலை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் செயல்படுத்துவோம். 

பிட்காயின் விவகாரத்தில் ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அதை போலீசாரிடம் காங்கிரஸ் தலைவர்கள் வழங்க வேண்டும். இதில் காங்கிரசார் அரசியல் செய்கிறார்கள். இதில் வேறு ஒன்றும் அவர்களின் நோக்கம் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்