நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கை அமல்; வெங்கையா நாயுடு பேச்சு

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா "டிரோன்" குவி மையமாக திகழும் என்றும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவே தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2021-11-15 21:30 GMT
பெங்களூரு: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா "டிரோன்" குவி மையமாக திகழும் என்றும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவே தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

புதிய தொழில்நுட்பங்கள்

பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர் பேசியதாவது:-

4-வது தொழில் புரட்சி நமது வீட்டு கதவை தட்டுகிறது. அறிவாற்றல் கொண்ட பொருளாதாரம் மற்றும் தடைகளை தாண்டிய புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தான் இதற்கு காரணம். இந்த சந்தர்ப்பத்தை நாம் எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது. நமது தொழில்நுட்ப நிறுவனங்கள், மாணவர்களை 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றார் போல் திறன் மிகுந்தவர்களாக தயார்படுத்த வேண்டும்.

புதிய தேசிய கல்வி கொள்கை

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சவால்களை எதிர்கொள்வது, அறிவாற்றலுடன் கூடிய பொருளாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை, சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நன்கு ஆராய்ந்து, சிந்தித்து கொண்டுவரப்பட்ட கொள்கை ஆகும்.

சம்பந்தப்பட்ட அனைவருடன் விவாதிக்கப்பட்ட பிறகே இந்த கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய-மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களுடன் நீண்ட ஆலோசனைக்கு பிறகு இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். நமது உயர்கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அமைக்க வேண்டும்.

5 லட்சம் வேலை வாய்ப்புகள்

இது விவசாயம், மருத்துவம், நிர்வாகம், வணிகம் மற்றும் தொழில் நிர்வாகம் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களை வழங்குகிறது. இந்த பி.இ.எஸ். கல்லூரி மாணவர்கள் 2 செயற்கைகோள்களை தயாரித்து இஸ்ரோ உதவியுடன் விண்ணில் செலுத்தியுள்ளனர். விண்வெளித்துறையில் மத்திய அரசு பெரிய அளவில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை மத்திய அரசு செய்துள்ளது.

இந்த வாய்ப்பை தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு அடையவும், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடையும் வகையிலும் பாடுபட வேண்டும். வரும் நாட்களில் விவசாயம், கண்காணிப்பு, போக்குவரத்து, ராணுவம், சட்டத்துறைகள் உள்பட பல்வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கு "டிரோன்" (ஆளில்லா குட்டி விமானம்) தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் உதவியாக இருக்கும். இதனால் அடுத்த 3 ஆண்டுகளில் இந்த டிரோன் துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி

வரும் 10 ஆண்டுகளில் இந்தியா தனது பாரம்பரிய பலமான புதுமைகளை புகுத்துதல், தொழில்நுட்பம், சிக்கன பொறியியல் போன்றவற்றால், இந்தியா உலக "டிரோன்" குவிமையமாக மாறும். இந்த துறையின் வளர்ச்சிக்காக நாம் திறன்மிகு மனிதவளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நமது தேசிய தேவைக்கு ஏற்றார் போல் மாற வேண்டும்.

இதற்காக இருக்கும் பாடப்பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் அது தொடர்பான புதிய பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும். 21-வது நூற்றாண்டில் உலக பொருளாதாரம் அறிவாற்றலுடன் கூடிய நடவடிக்கைகளை மையப்படுத்தியே உள்ளது. வருகிற 2050-ம் ஆண்டுக்குள் பல லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று இலக்குடன் இந்தியா செயல்படுகிறது.

பன்முறை ஒழுங்குமுறைகள்

இதில் 50 சதவீதத்தை அடையும் வகையில் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை, அறிவாற்றல் பலம் கொண்ட நாடாக மாற்றுவதில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. அறிவாற்றல் காப்புரிமை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

ஆராய்ச்சி-வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா பன்முறை ஒழுங்குமுறைகள் கொண்ட அணுகுமுறையை கையாள வேண்டும். மேலும் தொழில்-கல்வி நிறுவனங்களுடன் தொடர்பை பலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். நல்ல பயன்களும் கிடைக்கும். வெளிநாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை தான் இந்திய தொழில்நுட்ப மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தாய்மொழியில் கற்பிக்கப்படும்...

அதே போல் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களை உலக தரத்திற்கு எழுத முன்வர வேண்டும். இந்திய சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்ப கல்வியாளர்கள் தகவல்களை வழங்க முடியும். இது இளம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். விவசாயிகள், ஏழை மக்கள் மற்றும் கிராமப்பறங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவும்.

பாடத்திட்டங்களை இந்திய மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய மொழிகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மருத்துவம் உள்பட அனைத்து தொழில்நுட்ப பாடத்திட்டங்களும் மாணவர்களின் தாய் மொழியில் கற்பிக்கப்படும் தினத்தை காண நான் விரும்புகிறேன். சமூகம் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்துவது அவசர தேவையாகும்.

பருவநிலை மாற்றம்

தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளுக்கு பல்கலைக்கழங்கள் தீர்வு காண வேண்டியது அவசியம். பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி ஆகிய 2 பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

மேலும் செய்திகள்