மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது; கர்ப்பிணி, கணவர் உள்பட 3 பேர் பலி
இரியூர் அருகே மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கர்ப்பிணி, கணவர் உள்பட 3 பேர் பலியானார்கள். திருமணமான 9 மாதத்தில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
சிக்கமகளூரு: இரியூர் அருகே மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கர்ப்பிணி, கணவர் உள்பட 3 பேர் பலியானார்கள். திருமணமான 9 மாதத்தில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுபோல் சித்ரதுர்கா மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் மழைக்கு தாக்குபிடிக்காமல் வீடுகள் இடிந்து விழுகின்றன.
இந்த நிலையில், சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா காரேபானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னகேசவா (வயது 26). இவரது மனைவி சவுமியா(20). இந்த தம்பதிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சவுமியா, 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். காரேபானஹள்ளி கிராமத்தில் பெய்த மழைக்கு சென்னகேசவாவின் மண் வீட்டின் சுவர் இடியும் நிலையில் இருந்துள்ளது.
3 பேர் பலி
இந்த நிலையில் சென்னகேசவா-சவுமியா தம்பதி, சென்னகேசவாவின் தந்தை கிருஷ்ணப்பா(55) ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து புதுமண தம்பதி, கிருஷ்ணப்பா மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும் சென்னகேசவாவின் தந்தை கிருஷ்ணப்பா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பாவும் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதற்கிடையே சம்பவம் அறிந்ததும் இரியூர் தொகுதி எம்.எல்.ஏ. பூர்ணிமா மற்றும் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது, மழைகாலத்தில் மண் வீட்டை விட்டுவிட்டு வேறு ஒரு வாடகை வீட்டில் குடி போய் இருக்கலாம். அதைவிட்டுவிட்டு பாலித்தீன் பைபோட்டு இந்த வீட்டில் தங்கியதே 3 பேர் இறப்புக்கு காரணம் என்றனர். மழைக்கு வீடு இடிந்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.