அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக்கக்கோரி வழக்கு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக்கக்கோரி வழக்கு
மதுரை
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளன. ஆனால் மத்திய அரசின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும்தான் நாட்டின் அலுவல் மொழியாக உள்ளன. பல மாநிலங்களில் இந்தி பயன்பாட்டில் இல்லை. இந்தி முழுமையாக பயன்படுத்தப்படாத மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிதான் அலுவல் மொழியாக உள்ளது. பல மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழிகள் பயன்பாட்டில் இல்லை.
மத்திய அரசின் கீழ் உள்ள வங்கிகள், ரெயில்வே, தபால் உள்ளிட்ட பல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன. மக்களிடம் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
ஆனால் மத்திய அரசு அலுவலகங்களில் பல நடவடிக்கைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 99.99 சதவீதம் பேருக்கு சமஸ்கிருதம் தெரியாது. இது, அரசியலமைப்புச்சட்டம் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 20 மொழிகளை புறக்கணிக்கும் வகையில் உள்ளது. எனவே மத்திய அரசின் அலுவல் மொழிச்சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மற்ற மொழிகளையும் அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.