‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:
திறந்து கிடக்கும் சாக்கடை
நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையோரம் பாதாள சாக்கடையை திறந்து அடைப்புகளை அகற்றினர். பின்னர் அதனை மூடாமல் சென்று விட்டனர். இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடையை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?
- பிரபு, வண்ணார்பேட்டை.
அடிபம்பு சீரமைக்கப்படுமா?
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் கிறிஸ்து ஆலய தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அதனை சீரமைப்பதற்காக அடிபம்பை அகற்றி எடுத்து சென்றனர். ஆனால் அங்குள்ள ஆழ்குழாயை பாதுகாப்பான முறையில் மூடாமல் சென்று விட்டனர். இதனால் யாரேனும் ஆழ்குழாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த அடிபம்பை சீரமைக்கும் வரையிலும், ஆழ்குழாயை பாதுகாப்பாக மூடி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- மா.அந்தோணிராஜ், குலவணிகர்புரம்.
ஆபத்தான மின்கம்பிகள்
மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து 10-வது வார்டு கடம்பன்குளம் நடுத்தெருவில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான ேமாட்டார் அறைக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் தாழ்வாக தொங்குகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மணிகண்டன், கடம்பன்குளம்.
அபாயகரமான வளைவு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையான இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை வளைவின் இருபுறமும் எச்சரிக்கை பலகைகள், ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கர்கள், ஒளிரும் விளக்குகள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- சரத்குமார், சிங்கிலிபட்டி.
தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
தென்காசி யூனியன் கணக்கப்பிள்ளைவலசை பஞ்சாயத்து 8-வது வார்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதன் அருகில் அடவிநயினார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கால்வாயில் செல்கிறது. தற்போது மழைக்காலத்தில் கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால், சிமெண்டு சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய்க்குள் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தற்போது மணல் மூட்டைகள் வைத்து அடைக்கவும், பின்னர் தடுப்புச்சுவர் கட்டவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
-குளத்தூரான், கணக்கப்பிள்ளைவலசை.
குண்டும் குழியுமான சாலை
கடையநல்லூர் தாலுகா காசிதர்மம் கிராமத்தில் இருந்து கடையநல்லூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு மழைநீருடன் கழிவுநீரும் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பழுதடைந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அந்த சாலையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
- எம்.எஸ்.முகம்மது, அச்சன்புதூர்.
சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் கஸ்பா பஞ்சாயத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொது சுகாதார வளாகம், பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கே.எம்.மணிகண்டன், சேர்ந்தமரம்.
அடிப்படை வசதிகள் தேவை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு நடராஜ சன்னதி தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மழையில் தெரு முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. அதில் கழிவுநீரும் சேருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றினால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
- சிவா, வல்லநாடு