தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு

தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வீணாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.;

Update: 2021-11-15 19:58 GMT
நெல்லை:
தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வீணாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 137.80 அடியாக நீர்மட்டம் இருந்தது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.06 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 7,771 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 89.30 அடி தண்ணீர் உள்ளது. கொடுமுடியாறு அணை நிரம்பியதால், அந்த அணைக்கு வருகிற 700 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் தென்காசி மாவட்டம் கடனாநதி, ராமநதி அணைகளிலும் உபரிநீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை 2-வது நாளாக வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

கடலுக்கு செல்லும் தண்ணீர்

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையான மருதூர் தடுப்பணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 9,800 கன அடி தண்ணீர் செல்கிறது. மேலும் மருதூர் அணையின் கீழக்கால் வழியாக வினாடிக்கு 350 கன அடி தண்ணீரும், மேலக்கால் வழியாக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றங்கரையோர பகுதிகளில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதால், அதனை வறண்ட குளங்களுக்கு அனுப்பி தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை-3, சேரன்மாதேவி-2, மணிமுத்தாறு -5, நாங்குநேரி -5, பாபநாசம்-21, ராதாபுரம் -2, ஆய்க்குடி-8, செங்கோட்டை-14, சிவகிரி-10, தென்காசி-7, கடனாநதி-30, ராமநதி-3, கருப்பாநதி -8, குண்டாறு-17, அடவிநயினார் -102.

மேலும் செய்திகள்