காப்பீடு செய்த பருத்தி-மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு பெற்று தரக்கோரி மனு
காப்பீடு செய்த பருத்தி-மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்:
இழப்பீடு தொகை
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கல்பாடி, அய்யலூர், அய்யலூர் குடிக்காடு, வரகுபாடி, சிறுகன்பூர், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து திரண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்து வருகிறோம். இந்நிலையில் 2020-21-ம் நிதியாண்டில் நாங்கள் பருத்தி, மக்காச்சோள பயிர்களுக்கு மத்திய- மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்பேரில் காப்பீடு தொகை செலுத்தியிருந்தோம்.
இயற்கை இடையூறு போன்ற காரணங்களினால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் காப்பீடு தொகை செலுத்தியும் இழப்பீடு தொகை இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அருகே உள்ள தாலுகா பகுதிகளில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்து விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனுவினை வழங்கி விட்டு வந்தனர்.
திருநங்கைகளுக்கு மாற்று தொழில்
பெரம்பலூரை சேர்ந்த வக்கீல் மானேக் ஷா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திருநங்கைகளில் (மூன்றாம் பாலினத்தவர்களில்) சிலர் இரவு நேரத்தில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் சாலையோரங்களிலும், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாலையோரத்திலும் பாலியல் தொழில் செய்து வருவது அந்த வழியாக செல்வோர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் அந்த திருநங்கைகளுக்கு (மூன்றாம் பாலினத்தவர்களுக்கு) சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்று தொழில் தொடங்க கவுன்சிலிங் செய்ய அறிவுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு
குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நன்னை கிராமத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அரசு அதிகாரிகள் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், கண் துடைப்பாக சில ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டு சென்றனர்.
எனவே கலெக்டர் எங்கள் பகுதிக்கு வந்து நீர்நிலைகளை பார்வையிட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுமார் 70 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனையும் மீட்டு, அங்கு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும், என்று கூறியிருந்தார்.
220 மனுக்கள்
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 220 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் அவற்றின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.