கஜா புயல் தாக்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்தும் மாறாத சுவடுகள்

கஜா புயல் தாக்கி 3 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் இன்னும் அதன் சுவடுகள் மாறவில்லை

Update: 2021-11-15 19:18 GMT
கீரமங்கலம்
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி அதிகாலை கஜா புயல் கரையை கடந்த போது புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தென்னை, மா, பலா, தேக்கு, சந்தனம், வேம்பு உள்பட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை தோட்டங்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஏராளமான குடிசைகள், வீடுகளை புயல் கபளீகரம் செய்தது. விளைவு, பல நாட்களாக  குடிதண்ணீர், சாப்பாடு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வாரக்கணக்கில் போக்குவரத்து முடங்கியது. பல மாதங்களை கடந்த பிறகு நிலைமை சீரடைந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடுக்கள் இன்றளவும் மாறாமல் உள்ளதாக இருக்கின்றன என்று விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கட்டப்படாத வீடுகள்
மேலும் அவர்கள் கூறுகையில், கஜா புயலில் சேதமடைந்த வீடுகள் அனைத்தும் காங்கிரீட் வீடுகளாக கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் புயலில் பாதிக்கப்பட்டபோது மேற்கூரையாக போடப்பட்ட தார்பாய்களை தான் மக்கள் இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பட்டுக்கோட்டை சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகள் சின்னாபின்னமாகி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. 
அந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தூண்கள் மட்டுமே நிற்கிறது. ஆனால், வழிகாட்டி பலகைகள் இன்னும் அமைக்கப்படவில்லை. மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் நிழற்குடைகள் சீரமைக்கப்படவில்லை என்றனர்.
ஆதனக்கோட்டை
 இதேபோன்று ஆதனக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை கஜா புயலின் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியால் பறந்தது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் அந்த நிழற்குடை இன்னும் சரி செய்யப்படாவில்லை என்பது வேதனையான விஷயம். மேற்கண்டவை உள்பட பல்வேறு குறைகள் இன்னும் இருக்கின்றன என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்