சூரிய ஒளி மின் திட்டத்துக்கு நிலம் எடுக்கக் கூடாது- கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

நெல்லை அருகே கங்கைகொண்டானில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்துக்கு நிலம் எடுக்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Update: 2021-11-15 19:13 GMT
நெல்லை:
நெல்லை அருகே கங்கைகொண்டானில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்துக்கு நிலம் எடுக்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
ராஜபதி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், ‘‘கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கம் மூலமாக தனியார் சூரியஒளி மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த சித்தார் சத்திரத்தில் 222 எக்டேர், பிராஞ்சேரியில் 447 எக்டேர் மற்றும் கங்கைகொண்டானில் 5 எக்டேர் என மொத்தம் 674 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய பணி மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும்.
ஏற்கனவே தொழில் பூங்கா அமைக்கும் போது கங்கைகொண்டான், ராஜபதி பகுதியில் நீர் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆதார பகுதியை கையகப்படுத்தியது. இதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு அரசு உறுதி அளித்தபடி அரசு வேலை வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மேலும் சித்தார் சத்திரம் பகுதியில் நிலம் எடுக்க கூடாது. இந்த திட்டத்தை நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

நெல்லை அருகே உள்ள கட்டாரங்குளம் செபஸ்தியான் கோவில் தெரு மக்கள் சுப்புதாய் தலைமையில் வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறுகையில், ‘‘கட்டாரங்குளம் கிராமத்தில் 150 பறையர் குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களுக்கு பல்வேறு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும், அநீதி இழைக்கப்பட்டும் வருகிறது. எங்கள் பகுதி மக்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
எங்கள் பகுதி மாணவ-மாணவிகள் வடக்கு செழியநல்லூருக்கு பஸ்சில் சென்று படிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள்

பாளையங்கோட்டை யூனியன் காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் கொடுத்த மனுவில், ‘‘பாளையங்கோட்டை யூனியனில் தினக்கூலி அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு களப்பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மேற்பார்வையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியான கொசுப்புழு அழித்தல், கொழு ஒழிக்கும் பணியான கொசு மருந்து அடித்தல் பணிகளை வீடு, வீடாக சென்று பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு தினக்கூலி ரூ.388 நிர்ணயிக்கப்பட்ட போதும், ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே உயர்த்தப்பட்ட கூலியை வழங்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

சாலை மேம்பாடு

மானூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், “கங்கைகொண்டான் முலம் வெங்கடாசலபுரம் செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் மைதின் பாதுஷா தலைமையில் கொடுத்த மனுவில் ‘‘மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மாணவியரின் குட்டை பாவாடைகள் தடை செய்யப்பட வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.
இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பிளஸ்-1 மாணவி திடீர் தர்ணா

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி நரசிங்கநல்லூர் தீன் நகரை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஜனனி (வயது 17) உறவினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.
அந்த மனுவில், ‘‘என்னுடைய தாய், தந்தை இறந்து விட்டனர். இதை பயன்படுத்தி வங்கியில் இருந்த பணம் மற்றும் என்னுடைய சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்டுத்தர வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்