சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.;
புதுக்கோட்டை
திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிக்கு வந்தார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 7-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்த சிறுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வர சென்றார்.
வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை அறிந்த அவர் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றார். மேலும் வீட்டின் கதவை சாத்திவிட்டு, சிறுமியை தாக்கி மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை மீட்டனர்.
போக்சோ சட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக விராலிமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி மாதவனை கைது செய்தார். இந்த வழக்கில் மாதவன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாதவனை திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் பாதுகாப்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டிற்கு நேற்று மதியம் 1.10 மணி அளவில் அழைத்து வந்தனர். மாலை 3.15 மணி அளவில் கோர்ட்டில் மாதவன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாதவனை போக்சோ சட்டத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக நீதிபதி சத்யா தெரிவித்தார். இதனை கேட்டதும் தனக்கு தண்டனையை குறைத்து வழங்கும்படி மாதவன் கூறினார்.
சாகும்வரை ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக மாதவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை அடித்து தாக்கியதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சட்ட விரோதமாக அடைத்து வைத்ததற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை கேட்டதும் மாதவன் கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர், மாதவனை வேனில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் வாலிபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.