விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்.
க.பரமத்தி
தண்ணீர் திறப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவினார் . எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 75 கன அடி அளவில் தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தினை கருத்தில்கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 136 கன அடி வரை தண்ணீர் விடப்படும்.
50 கனஅடி நீர்வரத்து
கீழ்பவானி அணைத்திட்ட பாசன நிலங்களில் இருந்து கிடைக்கும் கசிவுநீர் கீழ்பவானி வாய்க்கால் நொய்யல் ஆற்றைக் கடக்கும் பகுதியில் இருந்து முத்தூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு நொய்யல் ஆற்றில் வடிகிறது. இந்த கசிவுநீர் மற்றும் ஆற்றில் வரும் மழைநீரும் நொய்யல் ஆற்றில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சின்னமுத்தூர் அருகே உள்ள கதவணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து 10 கி.மீ நீளத்திற்கு ஊட்டுக்கால்வாய் மூலம் கரூர் மாவட்டம், புகளுர் வட்டம், கார்வழி கிராமத்தில் அமைந்துள்ள இந்நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காக தேக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப்பருவ மழையினால் தற்போது ஆத்துப்பாளையம் அணை முழுக்கொள்ளளவான 235.52 மில்லியன் கன அடி நீரை பெற்றுள்ளது. தற்பொழுது வினாடிக்கு 50 கனஅடியாக நீர்வரத்து உள்ளது.
19,480 ஏக்கர் நிலங்கள்
இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
விவசாயிகள் இந்த நீரைப் பயன்படுத்தி நல்ல முறையில் விவசாயம் செய்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். தி.மு.க. ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வரக்கூடிய காலங்களில் இன்னும் நிறைய திட்டங்களை கரூர் மாவட்டம் பெறும், அதில் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் வளர்ச்சியடைக்கூடிய திட்டங்களும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான கார்த்தி உள்பட பலர் உடனிருந்தனர். நொய்யல் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் பொதுமக்கள் மீன்பிடித்தனர்.