ரூ 5 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ரூ 5 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
விழுப்புரம்
தனியார் நிதி நிறுவனம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் பணம் செலுத்தினால் 4, 5 ஆண்டுகள் கழித்து இருமடங்கு மற்றும் 3 மடங்காக தொகைக்கேற்ப பணம் தரப்படும் என்று அந்நிறுவன ஊழியர்கள், பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதை நம்பிய கண்டாச்சிபுரம், காடகனூர், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்காணோர் அந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினர். பணத்தை வசூலித்த அந்நிறுவனத்தினர், ஏற்கனவே கூறியபடி உரியவர்களுக்கு 4, 5 ஆண்டுகள் கழித்து பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு பலமுறை சென்று முறையிட்டும் உரிய பதில் இல்லை.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
இதனால் பணத்தை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட சிலரை, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர்கள், கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கண்டாச்சிபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரிடம் அந்த தனியார் நிதி நிறுவனம் ரூ.5 கோடி வரை பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்துள்ளது. எனவே அந்த நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.