சின்னசேலம் தனியார் பள்ளி மாணவன் இறந்த வழக்கில் காவல்துறை தலைமையிடத்து டி ஐ ஜி விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவன் இறந்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் தமிழக காவல்துறை தலைமையிடத்து டி ஐ ஜி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்

Update: 2021-11-15 17:35 GMT
விழுப்புரம்

சாவில் மர்மம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் சுரேஷ்(வயது 10). சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த இவன், ஆத்தூரில் உள்ள வயல்வெளி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் எப்படி இறந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாணவன் சுரேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவனது தந்தை பாவாடை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இந்த வழக்கை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

விசாரணை

இதையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த வழக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மாணவன் சுரேஷ், தான் படித்து வந்த பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததும், அதனை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகத்தினர், மாணவன் உடலை எடுத்துச்சென்று ஆத்தூரில் உள்ள வயல்வெளி பகுதியில் வீசிவிட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் பிரகாஷ், ஊழியர்களான சின்னப்பன், மணிபாலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே சின்னப்பனும், மணிபாலனும் இறந்து விட்டனர். இவ்வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

டி.ஐ.ஜி. சாட்சியம்

இந்நிலையில் நேற்று இ்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான ராதிகா நேற்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அவர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். சாட்சியம் அளித்த ராதிகா, தற்போது சென்னையில் தமிழக காவல்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்