மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கொத்தனார் கைது

கொள்ளிடம் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-15 17:02 GMT
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கொத்தனாரை போலீசார் கைது  செய்தனர்.
கொத்தனார்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது38). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலா (35). இவர்களுக்கு சரவணன் (15), சந்தோஷ் (13) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கலா கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று  மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாலை மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக கணவர் அய்யப்பனிடம், கலா ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார். இதற்கு அவர் தர மறுத்ததால் கணவரை கலா திட்டியதாக தெரிகிறது. 
அறைந்ததால் சுருண்டு விழுந்தார்
இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், கலாவை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் அவர் சுருண்டு  கீழே விழுந்துள்ளார். இதனை பொருட்படுத்தாமல் அய்யப்பன் வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் 2 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கலா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து கலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிராம மக்களிடம் அய்யப்பன் நாடகமாடி அவரை உடலை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்க செய்ய முயன்றுள்ளார். 
போலீசில் புகார்
அக்கம்பக்கத்தினர் மூலம் இதனை அறிந்து கொண்ட கலாவின் அண்ணன் வள்ளுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (41), கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து கலாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை பிடித்து விசாரணை நடத்தினர். 
கைது
விசாரணையில்  மனைவி கலாவை அடித்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அய்யப்பனை போலீசார் கைது செய்து சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்