கோதவாடிகுளத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திடீர் நிறுத்தம்
கோதவாடிகுளத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திடீர் நிறுத்தம்
கிணத்துக்கடவு
பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோதவாடி குளத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
கோதவாடி குளம்
கிணத்துக்கடவு அருகே கோதவாடிகுளம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இந்த குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. மழை காரணமாக பி.ஏ.பி. வாய்க்காலில் உபரிநீர் செல்வதால் அதை குளத்துக்கு திறக்க வேண்டும் என்று இந்த குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்பு மெட்டுவாவி மற்றும் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் என 2 பகுதியில் இருந்து கோதவாடி குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் நிறுத்தம்
இதில் மெட்டுவாவி வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட பகுதியில் ஏராளமான தடுப்பணைகள் இருப்பதால் தண்ணீா் இன்னும் குளத்துக்கு வந்து சேரவில்லை. ஆனால் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் குளத்துக்கு வந்து சேர்ந்தது.
இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திடீரென்று 2 வாய்க்கால்களில் குளத்துக்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
இது குறித்து கோதவாடி குளத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
நிரப்ப வேண்டும்
கோதவாடி குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி யாக இருந்தது. மெட்டுவாவி வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீரால் 15 தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இந்த தண்ணீர் குளத்துக்கு வந்து சேரவில்லை.
செட்டியக்காபாளையம் வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே சிறிதளவு வந்து உள்ளது. அதற்குள் தண்ணீர் நிறுத்தப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த முறையாவது தண்ணீர் திறந்து குளத்தை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.