ஆபத்தான மரம்
கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் தனியார் குடியிருப்புப் பகுதிக்கு அருகே இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான கற்பூர மரம் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்த மரம் இன்னும் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் உள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பொது மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே அந்த மரத்தை அகற்ற வேண்டும்.
மணிகண்டன், கோத்தகிரி.
வளைந்து நிற்கும் மின்கம்பம்
கோத்தகிரியில் இருந்து மளிதேன் கிராமத்திற்குச் செல்லும் சாலையோரத்தில் அரசுப் பள்ளிக்கு அருகே மின்கம்பம் வளைந்து காணப்படுவதுடன், சாலையில் சரிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோத், கோத்தகிரி.
குப்பை தொட்டி இடம் மாறுமா?
கோவை மாநகராட்சி 27-வது வார்டு அஞ்சுகர் நகர் மெயின் ரோடு பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால் இது நிரம்பி வழிந்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை. இ தனால் குப்பைகள் சாலைக்கு வந்துவிடுவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் இருக்கும் இந்த குப்பை தொட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
மாணிக்கம், அஞ்சுகம் நகர்.
குதிரைகள் தொல்லை
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே குதிரைகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலையில் நடமாடும் குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார் கள். சில நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சாலையில் குதிரை தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பாண்டியன், கோவை.
குப்பை தொட்டி வேண்டும்
கோவை ராமநாதபுரம் பாரதிநகர், காவேரி நகரில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. காற்று வீசும்போது அந்த குப்பைகள் பறந்து வீடுக ளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அங்கு திரியும் தெருநாய்கள் அந்த குப்பைகளை சாலையில் கொண்டு வந்து போடுவதால் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
ராமன், ராமநாதபுரம்.
நடைபாதையில் கழிவுநீர்
கோவை மாநகராட்சி 83-வது வார்டு ராஜவீதி, டி.கே.மார்க்கெட் பகுதியில் நடைபாதையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடைபாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
ஆனந்த், கோவை.
டவுன் பஸ்கள் வேண்டும்
கருமத்தம்பட்டி கிளை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சோமனூரில் இருந்து திருப்பூர் வரை டவுன் பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்த பஸ்களை கருமத்தம்பட்டி வரை இயக்கி னால் ஏராளமான பயணிகள் பயன்பெறுவார்கள். எனவே திருப்பூரில் இருந்து சோமனூர் வரும் பஸ்கள் கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும்.
ராஜேந்திரன், கருமத்தம்பட்டி.
முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையம் தாமோதர சாமி லே-அவுட் பகுதியில் சாக்கடை கால்வாயை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து அடைத்து உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதுடன் சில நேரத்தில் சாலை யில் வழிந்து செல்கிறது. எனவே நோய் பரவும் முன்பு சாக்கடை யில் ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.
குமாரவேல், தாமோதரசாமி லே-அவுட்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை நேருநகர், காளப்பட்டியில் இருந்து சித்ரா நோக்கி வரும் வாகனங்கள் அங்குள்ள சிக்னலில் நேராக செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. மாறாக, இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலையை அடைந்து பின்னர் யூ டேர்ன் எடுத்து அதன்பின்னர் சித்ரா சிக்னல் வரவேண்டிய நிலை உள்ளது. தேவையில்லாமல் இதுபோன்று சுற்றி வருவதால் வாகன ஓட்டுகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நேருநகர், காளப்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் நேராக சிக்னலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
குருராஜன், நேருநகர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்கு சரிசெய்யப்பட்டது
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சாலையின் நடுவே இருந்த மின்விளக்கு ஒளிராமல் இருந்தது. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ததால் தற்போது ஒளிர்ந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
பலராமன், ராமநாதபுரம்.