கொடைக்கானலில் 6 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் 6 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மேகமூட்டம் தரை இறங்கியது. அத்துடன் லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலையில் வெப்பம் நிலவியது. பின்னர் காலை 11 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நட்சத்திர ஏரியில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் கொட்டியது. அதேபோல நகரின் அருகிலுள்ள பியர்சோலா அருவி, பாம்பார் அருவி உள்பட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனிடையே பகல் நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மாணவ,மாணவிகள் பள்ளி முடிந்து மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர்.