போக்குவரத்து தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத் போன்ற தாலுகாக்களில் உள்ள 50 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி விடுத்து கண்காணித்து வருகிறார்.

Update: 2021-11-15 14:15 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை பூண்டி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காஞ்சீபுரம் பாலாற்றில் பாய்ந்தோடுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் அதிக அளவில் வெள்ளம் செல்வதால் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் போன்ற தாலுகாக்களில் உள்ள 50 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி விடுத்து கண்காணித்து வருகிறார்.

இந்தநிலையில் வாலாஜாபாத் அருகே உள்ள வாலாஜாபாத் - அவளூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் 2 அடிக்கு மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்தை தடை செய்து தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். போக்குவரத்து தடைபட்டு உள்ளதால் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் தரைப்பாலம் வழியாக செல்லும்,

அவளூர் அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, கம்மராஜபுரம், தம்மனூர், வள்ளி மேடு, இளையனார்வேலூர் காவாந்தண்டலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தில் சாலையை மூழ்கடித்த படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து, பாதுகாப்பினை பலப்படுத்த போலீசாருக்கும் வருவாய்த்துறையினருக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்