மூடப்பட்ட சாலையை திறக்க நடவடிக்கை

மேலூர் ஊராட்சியில் மூடப்பட்ட சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2021-11-15 13:55 GMT
ஊட்டி

மேலூர் ஊராட்சியில் மூடப்பட்ட சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அவர்களிடம் அரசு ஊழியர்கள் மனுக்களை பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்து ஒப்புகைச்சீட்டுகளை வழங்கினர். முன்னதாக மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை கொடுத்தனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

சாலை மூடல்

இதையடுத்து குன்னூர் அருகே உட்லண்ஸ் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- மேலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட உட்லண்ஸ் சுற்று வட்டார கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவ-மாணவிகள் குன்னூர், சேலாஸ் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக உட்லண்ஸ் பகுதியில் உள்ள தனியார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த வழியாக அரசு பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அந்த சாலை திடீரென மூடப்பட்டு, பூட்டு போடப்பட்டது. இதனால் கிராமங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த சாலையை திறந்து கிராமங்களுக்குள் அரசு பஸ், பள்ளி வாகனம் வந்து செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுதி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்