மாதிரி நூலகம் திறப்பு

உடுமலையில் ரூ.50லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட மாதிரி நூலகம் திறப்பு விழாநடந்தது. இதில் 3அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-15 13:46 GMT
உடுமலை,
உடுமலையில் ரூ.50லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட மாதிரி நூலகம் திறப்பு விழாநடந்தது. இதில் 3அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மாதிரி நூலகம்
உடுமலை குட்டைத்திடல் பகுதியில் உள்ள நூலகம் ரூ.50 லட்சம் செலவில்  மாதிரி (டிஜிட்டல்) நூலகமாக நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டது. இந்த நூலகத்தில் குடிமைப்பணி (இந்திய ஆட்சிப்பணி) தேர்வு பயிற்சிக்கான தனிப்பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் புதியதாக 15கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இணையதள உபகரணங்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி நூலகம் திறப்பு விழா பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நேற்று  நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். விழாவில் குடிமைப்பணி தேர்வு பயிற்சிக்கான தனிப்பிரிவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இணையதளப்பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.குழந்தைகள் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
 முன்னதாக நூலக வாசகர் வட்டத்தலைவர் லெனின் பாரதி அறிக்கை படித்தார்.முடிவில் நூலகர் பீர்பாஷா நன்றி கூறினார்.விழாவில் ஆர்.டி.ஓ.கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கலந்து கொண்டனர்.
பள்ளியில் ஆய்வு
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு ரூ.9லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை திறந்து வைத்தார். பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். பள்ளியில் வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்