தாராபுரம்,
கோவையில் 17 வயது பிளஸ் 2 மாணவி வீட்டில் தனியாக இருந்த போது ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதன் மூலம் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் தெரியவந்தது. அதன் பேரில் பள்ளி ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருந்த பள்ளியின் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரம், திருப்பூர், உடுமலை, பல்லடம் பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாட்ஸ்-அப் குழு வாயிலாக ஒன்றிணைந்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். வருங்காலத்தில் இது போன்ற அத்துமீறல் நடைபெறாவண்ணம் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும், பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.