நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் மீண்டும் எல்லை தாண்டினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கண்டிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் இருந்து நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் மீண்டும் எல்லை தாண்டினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கண்டிக்கப்பட்டு உள்ளது.
கைது
நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 13-ந்் தேதி அன்று 2 விசைப்படகில் 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்த தாக கூறி இந்த 2 படகையும் அதில் இருந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 23 மீனவர்களும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது 23 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டதுடன் மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களையும் அரசுடைமையாக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் மீண்டும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் இந்த மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏமாற்றம்
விடுதலை செய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என்றாலும் படகுகள் விடுவிக்கப்படாமல் அரசுடைமை ஆக்கப்பட்டு உள்ளது மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.