தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.

Update: 2021-11-15 05:17 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.
யானைகள் முகாம்
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் பல்வேறு கிராம பகுதிகளின் வழியாக சென்று  நேற்று காலை அந்தேவனப்பள்ளி கிராமத்தின் அருகிலுள்ள பெரிய ஏரி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டு இருந்தன. காட்டுயானைகளை பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுயானைகள் கூட்டத்தை பட்டாசுகள் வெடித்து விரட்டினர்.
எச்சரிக்கை
ஆனாலும் காட்டு யானைகள் கூட்டம் அதேபகுதியில் விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள் அனைத்தும் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த காட்டு யானைகளை கண்காணித்தும் வருகின்றனர்.
அந்தேவனப்பள்ளி கிராமப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அந்தேவனப்பள்ளி, கங்கதேவனப்பள்ளி, முனுகனப்பள்ளி, தொட்டூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்