பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் மாமனார் மருமகன் கைது
பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாமனார் மருமகனை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாமனார், மருமகனை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் தண்டுகாரனஅள்ளி, திருமல்வாடி கிராமங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சக்திவேல் (வயது 30), திருமல்வாடியை சேர்ந்த இவரது மாமனார் சின்னசாமி (55). புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த குமார் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
2 பேர் கைது
இதில் சின்னசாமி வீட்டில் இருந்து 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சக்திவேல், சின்னசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.