காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-11-15 05:16 GMT
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழை
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல்பாறை, முத்தூர் மலை மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பென்னாகரம்-கேரட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே மேட்டூர் அணை நிரம்பியதால், ஒகேனக்கல் மெயின் அருவி வரை தண்ணீர் தேங்கி நிற்பது போன்றும் காணப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்றனர்.

மேலும் செய்திகள்