பசவராஜ் பொம்மைக்கு உறுதுணையாக 2 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு உறுதுணையாக இருந்து கட்சியை பலப்படுத்த 2 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
சட்டசபை தேர்தல்
கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது, 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகிய 3 பேரும் துணை முதல்-மந்திரிகளாக இருந்தனர். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற போது துணை முதல்-மந்திரிகளாக யாரையும் பா.ஜனதா மேலிடம் நியமிக்கவில்லை. இதன் காரணமாக துணை முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்திருந்த ஸ்ரீராமுலு, அசோக் உள்ளிட்ட தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதன் காரணமாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும் என்று ஏற்கனவே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.
2 துணை முதல்-மந்திரி பதவி
இதற்கு பா.ஜனதா மூத்த தலைவர்களிடையே அதிருப்தி உண்டானது. ஆனால் இடைத்தோ்தல் தோல்வி மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அத்துடன் பிட்காயின் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மட்டுமே தனியாக பதிலளிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும், 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வசதியாகவும் கர்நாடகத்தில் புதிதாக 2 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், கூடிய விரைவில் 2 துணை முதல்-மந்திரிகளை நியமிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மந்திரிசபை விரிவாக்கம்
இந்த 2 துணை முதல்-மந்திரி பதவிகளும் யார், யாருக்கு வழங்கப்படும், எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. 2 துணை முதல்-மந்திரிகளை நியமிப்பதன் மூலம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு உறுதுணையாகவும், கட்சியை பலப்படுத்த முடியும் என்பதற்காகவும் இந்த முடிவை பா.ஜனதா மேலிடம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பி மந்திரிசபை விரிவாக்கம் செய்வதற்கும், சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள இப்போதில் இருந்தே பா.ஜனதா மேலிடம் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.