ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
தாவணகெரே அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
தாவணகெரே:
3 சிறுவர்கள் சாவு
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா ஜல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சையது (வயது 10), அஷ்ரப் (7), ஆசிப் (5). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டு இருந்தனர். பின்னர் கை, கால்களை கழுவுவதற்காக 3 பேரும் ஜல்லூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று இருந்தனர். ஏரியின் கரையில் நின்று 3 பேரும் கை, கால்களை கழுவி கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். 3 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் ஏரியில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.
தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜகலூர் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்கள் வீட்டிற்கு நேற்று ஜகலூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராமசந்திரப்பா சென்றார். அவர்கள் 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் 3 பேரி்ன் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ராமசந்திரப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் ஜல்லூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.