காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது - பசவராஜ் பொம்மை பேச்சு
சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மாநாட்டில் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரிகள் மாநாடு
தென் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சிலின் 29-வது ஆலோசனை கூட்டம் மற்றும் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த மாநாடு நேற்று மாலையில் திருப்பதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.
மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சோி, கேரள மாநில முதல்-மந்திரிகள், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
பெருமை சேர்க்கும் விஷயம்
தென் மாநிலங்களை சேர்ந்த நாம் எப்போதும் தொடர்பில் இருந்து வருவதால், ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவது அவசியமானதாகும். தென் மாநிலங்கள் சுதந்திரமாக இல்லாமல், பரஸ்பர ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையுடன் இருந்து பணியாற்றினால் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும். நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து பணியாற்றும் பொறுப்பு, நம்மிடம் தான் இருக்கிறது.
தென் மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நீர் பங்கீடு, போக்குவரத்து தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கும் பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் ஒரு இடமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தென் மாநிலங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
அனுமதி வழங்க கூடாது
கோதாவரி, காவிரி உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டம் பற்றி கா்நாடகத்தின் கருத்து குறித்து ஏற்கனவே தேசிய நீர்ப்பாசனத்துறைக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி, கிருஷ்ணா, பென்னாரு ஆகிய நதிகளில், அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான நீரை பங்கிட்டு கொள்ள வேண்டும். காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில், காவிரி நீரை பயன்படுத்தி காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த சட்டத்தில் இடமில்லை. சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று இந்த மாநாட்டில் கேட்டுக் கொள்கிறேன். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி உபரிநீரை பயன்படுத்தி பெரிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
கூட்டு ஆய்வு நடத்த வேண்டும்
இதுபோல், கிருஷ்ணா நதியின் உபரிநீரை பயன்படுத்தி ரங்காரெட்டி மற்றும் நக்கலகுந்தியில் புதிய நீர்ப்பாசன திட்டங்களை தெலுங்கானா அரசு தொடங்கவதற்கும் அனுமதி இல்லை. துங்கபத்ரா நதியின் குறுக்கே ஆந்திர மாநில அரசு குந்தரவுலு நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்படுவதால், கர்நாடகத்தில் பல்வேறு கிராமங்கள் மூழ்கும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த நீர்ப்பாசன திட்டம் குறித்து கூட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும். பின்னர் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் குற்றங்களை தடுக்க, மத்திய உள்துறையின் உதவி மிகவும் தேவையாகும். இதற்காக மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கர்நாடகத்துடன் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரவுடன் போக்குவரத்தை ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.