வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-14 21:18 GMT
பொன்மலைப்பட்டி:

பின்பக்க கதவு உடைப்பு
திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று அந்த வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அறிந்த அவர்கள், உடனடியாக திருச்சிக்கு வந்தனர். இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
50 பவுன் நகைகள் கொள்ளை
இதில், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அதில் 4 மர்ம வாலிபர்கள், பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைவதும், பின்னர் பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் கொள்ளையர்கள் முகங்கள் பதிவாகியிருந்ததை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கொள்ளை போனதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து எந்த புகாரும் வரவில்லை. புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்