ஓட்டலில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த 4 பேர் கைது
ஓட்டலில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி:
4 பேரிடம் விசாரணை
திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஓட்டல் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த மேலும் 2 பேரை பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், லால்குடியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 25), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் (24), கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன் (35), மதுரையை சேர்ந்த அஜிம்கான் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் சங்கிலி பறிப்பு, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
சதித்திட்டம்
இதில் திருச்சி கே.கே.நகரில் நடந்த ஒரு குற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருடன் அதே சிறையில் அஜிம்கான், ஸ்டீபன், ஸ்ரீராம் ஆகியோரும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இவர்கள் 4 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு 4 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சியில் சந்தித்துள்ளனர். அதன்பிறகு இவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, வழிப்பறி மற்றும் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்புராடு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.