பலத்த மழையால் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ராட்சத பாறைகள் ரோட்டில் உருண்டன
பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு வந்து ரோட்டில் விழுந்தன.
அந்தியூர்
பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு வந்து ரோட்டில் விழுந்தன.
பர்கூா் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் 33-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் வாகனங்கள் பர்கூர் மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பர்கூர் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பர்கூர் மலைப்பாதையில் உள்ள செட்டிநொடி, நெய்கரை உள்பட 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து 2 நாட்களாக பாதிக்கப்பட்டது. பாறைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
தடை
இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு செட்டிநொடி, நெய்கரை ஆகிய 2 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் 2 நாட்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாறைகள் வெடிவைத்து தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டன.
தொடர் மண் சரிவு காரணமாக பர்கூர் மலைப்பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் இலகு ரக வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
மீண்டும் மண் சரிவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செட்டிநொடி என்ற இடத்தில் மீண்டும் 3-வது முறையாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதியில் இருந்த ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் நேற்று காலை 6 மணி அளவில் பர்கூர் மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநில பகுதிக்கு சென்ற வாகனங்களும், கர்நாடக மாநிலத்தில் இருந்து அந்தியூருக்கு வந்த வாகனங்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டன.
தொய்வு
இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் விழுந்த கிடந்த சிறிய பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெரிய பாறைகளை வெடி வைத்து தான் தகர்த்து அப்புறப்படுத்த முடியும். எனவே அதற்கான முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பர்கூர் மலைப்பாதையில் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருப்பதால் பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.