உணவு வழங்க சென்ற முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல்

ஆரல்வாய்மொழி அருகே மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்க சென்ற முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-14 20:35 GMT
அழகியபாண்டியபுரம், 
ஆரல்வாய்மொழி அருகே மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்க சென்ற முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாக்கப்பட்டார் 
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, திருப்பதிசாரம், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் சண்முகபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் சிலர் சென்றனர். அப்போது அங்கிருந்த சகாயநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் உணவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மரிடம் தகராறில் ஈடுபட்டு திடீரென தாக்கியதாக தெரிகிறது.
சாலை மறியல்
இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் முகாம் அருகில் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்