சுகாதார சீர்கேடு
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழியில் மந்திரி சிதம்பரநாதன் அரசு ஊர் புற நூலகம் உள்ளது. இந்த நூலகத்தை ஒட்டி ஒரு பொது கழிவறை இருக்கிறது. தற்போது அந்த கழிவறையின் செப்டிக் ங் நிறைந்து வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீனிவாசன், ஈத்தாமொழி.
எரியாத தெருவிளக்கு
மருங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி இருள் இருக்கும். தற்போது மழையும் பெய்து வருகிறது. இரவில் சாலையில் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்தக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் வீடுகளில் இருந்து பெண்கள் வெளியே செல்வது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.
ஓடை அமைக்கப்படுமா?
கப்பியறை பேரூராட்சியில் உள்ள வாழவிளை பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சாலையில் தண்ணீர் வடிய வழியில்லை. இதனால் இந்த வழியாக நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாது. மேலும் மழை நீரும் வடிய பல நாட்களாகி விடுகிறது. எனவே இந்த சாலையில் தேங்கும் மழைநீர் செல்ல ஓடை அமைக்க வேண்டும். மேலும் சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெபலின், கப்பியறை.
மழைநீர் செல்ல வசதி வேண்டும்
நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் செல்ல வழியில்லை. இதனால் தற்போது பெய்த மழை நீர் வடியவசதி இல்லாமல், சகாயநகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் கிராமம், பண்டாரபுரம், விசுவாசபுரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். எனவே மழைநீர் செல்ல உரிய வசதியை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
-ராமன், தோவாளை.
போக்குவரத்துக்கு இடையூறு
காட்டாத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உலக்கரி பொத்தையில் அதாவது பொத்தை விளை பகுதியில் மண் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்து கிடக்கிறது. இதனால் சாலை வழியாக நடந்தோ வாகனத்திலோ செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாறை மற்றும் மண்ணை அகற்றி சாலையில் சீரான போக்குவரத்து நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லலிதா பொத்தைவிளை.
சீரமைக்க வேண்டும்
எறும்புக்காடு பகுதியில் இருந்து பழவிளை செல்லும் சாலையில் அய்யா கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். தற்போது மழை பெய்து வருவதால், சாலை மேலும் சேதமடைந்து உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோகுல், எறும்புக்காடு.