குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி அருகே 200 ஏக்கர் வாழைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
தென்காசி:
குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி அருகே 200 ஏக்கர் வாழைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அருவியில் வெள்ளம்
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. ஆனால் நேற்று முன்தினத்தை விட நேற்று நீர்வரத்து சற்று குறைந்து இருந்தது. ஆனாலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
திருக்குறுங்குடி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டி தண்ணீர் நிரம்பி நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
இதனால் நம்பியாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வடமலையான் கால்வாய், சிறுவளஞ்சி கால்வாய் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஏர்வாடி, சிறுமளஞ்சி ஊருக்கு மேற்கேயுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. அங்கு சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் மழைநீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழைகள் மழைவெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.