ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு
ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு
ஏற்காடு, நவ.15-
தொடர் மழை காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.
ஏற்காடு-குப்பனூர் சாலை
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் தீபாவளி பண்டிகை அன்று மண் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
மீண்டும் மண் சரிவு
இந்நிலையில் ஏற்காட்டில் நேற்று காலை 10 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் ஏற்காடு-குப்பனூர் சாலையில் மீண்டும் பாறைகள் சரிந்து விழுந்தும், ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. 2, 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு இந்த பாதையில் வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் சரிந்துவிழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தி சாலையை நேற்று பிற்பகலுக்குள் முழுமையாக சீரமைத்தனர். அதே நேரத்தில் சேலம்-ஏற்காடு பிரதான பாதையில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.