‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்ச்சாலை வேண்டும்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பாப்பாநாடு மற்றும் மதுக்கூர் பகுதி செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. மேலும், சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ்குமார், ஒரத்தநாடு.
தெருவிளக்குகள் ஒளிருமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சேசம்பாடி பகுதியில் உள்ள மூப்பக்கோவில் மேலத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் தற்போது பராமரிப்பின்றி எரியாமல் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-தாஸ், கும்பகோணம்.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை பள்ளியக்ரகாரம் கடைத்தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு துருப்பிடித்து உடைந்து பெரிய ஓட்டையாக மாறி உள்ளது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதி பலவீனமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சாவூர்.