மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.27 ஆயிரம் திருட்டு

மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.27 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-14 18:50 GMT
பெரம்பலூர், 
மளிகை கடை
பெரம்பலூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 35). இவர் எளம்பலூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். 
நேற்று காலையில் கணேஷின் கடையின் ஷட்டர் கதவு திறந்து கிடப்பதை கண்ட அக்கம், பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது.
ரூ.27 ஆயிரம் திருட்டு
பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.27 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கணேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்