குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சாலை விரிவாக்கத்தின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-14 18:47 GMT
பெரம்பலூர்,
சாலை அகலப்படுத்தும் பணி
பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை தற்போது அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து வன்னிமலை பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாய் அடிக்கடி சேதமடைந்து வருவதும், அதனை ஊராட்சி நிர்வாகமும் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று வன்னிமலை பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது சாலை அகலப்படுத்தும் பணி செய்ய வந்தவர்களிடம் பொதுமக்கள் மதியம் வரை பொறுத்திருக்குமாறும், குடிநீர் சென்ற பிறகு வேலை செய்யுமாறு கூறினர். 
காலிக்குடங்களுடன் மறியல்
இதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் குடிநீர் சென்று கொண்டிருந்த குழாய் சேதமடைந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வன்னிமலை பகுதி மக்கள் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் அம்மாபாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த அம்மாபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி நிர்வாகத்தினர் மாலைக்குள் சேதமடைந்த குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். 
இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்