மாவட்டத்தில் 704 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-11-14 18:24 GMT
புதுக்கோட்டை:
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். 2-வது டோஸ் போடாமல் இருந்தவர்கள் செலுத்திக்கொண்டனர். மாவட்டத்தில் வீடு, வீடாகவும் சுகாதார பணியாளர்கள் சென்று கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்தினர். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே தெக்கூர் சிங்கை சித்தர் ஐயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாணவர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்" நடைபெற்றது. முகாமில் நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கணேஷ் குமார் மேற்பார்வையில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் தவணை தடுப்பூசியினையும், 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இரண்டாம் தவணை தடுப்பூசியினையும் செலுத்திக் கொண்டனர். மேலும், பேராசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
காரையூர்
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ஒளியமங்கலம், மறவாமதுரை, கொன்னையம்பட்டி, நல்லூர், வாழைக்குறிச்சி அரசமலை உள்பட பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 30 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்துக் கொண்டனர். முகாமினை பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, தேர்தல் தனி துணை தாசில்தார் சேகர், வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலபதி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்  ஆய்வு மேற்கொண்டனர். 
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். 
இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆய்வு செய்தார்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட 15 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் செய்திகள்