மானாமதுரையில், உரம் வாங்குவதற்காக இரவில் திரண்ட விவசாயிகள்

மானாமதுரையில் உரம் வாங்குவதற்காக விவசாயிகள் இரவில் திரண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு உரம் வினியோகிக்கப்பட்டது.

Update: 2021-11-14 18:14 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் உரம் வாங்குவதற்காக விவசாயிகள் இரவில் திரண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு உரம் வினியோகிக்கப்பட்டது.

உரம் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நெற்பயிர் நன்கு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உர தேவை அதிகரித்துள்ளது. ஒருபுறம் மாநிலம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவினாலும், வந்த உரங்களையும் வினியோகிப்பதில் குளறுபடியால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கூடுதலான உரங்கள் இருப்பில் உள்ளதாகவும், பல சங்கங்களில் ஒரு மூடை கூட கிடையாது என்றும் கூறப்படுகிறது. உரம் இருப்பு உள்ள கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மூடைக்கு ரூ.200 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இருப்பினும் உரம் தட்டுப்பாட்டை தடுக்க அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இரவில் குவிந்த விவசாயிகள்

இந்த நிலையில் நேற்று இரவு மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே தனியார் உரக்கடையில் யூரியா, காம்பளக்ஸ், பொட்டாசியம் உள்ளிட்ட உரங்களை வாங்க விவசாயிகள் குவிந்தனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நிற்பது போல நீண்ட வரிசையில் உரம் வாங்குவதற்காக விவசாயிகள் நின்றிருந்தனர்.
500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டதால் தகவல் அறிந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டப்பட்டது. போலீசார் விவசாயிகளை வரிசையில் நிற்க வைத்து உரம் வாங்கி செல்ல அறிவுறுத்தினர்.

21 டன் விற்பனை

ஒரு மூடை யூரியா ரூ.266-க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி சென்றனர். இது குறித்து உரக்கடைக்காரர் ஒருவர் கூறும் போது, ஒரே நிறுவனத்தை சேர்ந்த யூரியா மட்டும் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. அனைத்து நிறுவனத்தை சேர்ந்த யூரியாவும் விற்பனைக்கு வந்தால் இந்த தட்டுப்பாடு நிலை ஏற்படாது. எனவே அனைத்து நிறுவனங்களும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி யூரியா உரம் கிடைக்க சப்ளை செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மானாமதுரையில் 21 டன் யூரியா உரம் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்