குடியிருப்பு பகுதியில்மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் கிராமத்தில் கொளத்து மேட்டுத்தெருவில் சுமார் 80 குடும்பங்கள் வசிக்கும் இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதியோ, கால்வாய் வசதியோ செய்யப்படாததால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே உடனடியாக சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருளர் குடியிருப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சுரேஷ்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.